Saturday, June 27, 2009

TFT



'நேரம் போகுதம்மா.. கெதியா சாப்பாட்டத்தாம்மா...!'

'கொஞ்சம் பொறடி, இட்லியை கோப்பையில போட்டுக்கொண்டிருக்கிறேனல்ல...! '

'இண்டைக்கு முதல் நாளம்மா... நேரத்தோட போகணும்மா... சாப்பாட்ட ஊட்டிவிடம்மா...' மஞ்சரியின் காலை நேர பரபரப்பு அவள் அம்மாவையும் பாதித்திருந்தது.

கணிதத்தினைக் காதலிப்பவள் மஞ்சரி. எப்போதுமே எதையாவது சாதிக்கணும் என்கின்ற தீ அவள் மனதிற்குள் எரிந்து கொண்டே இருக்கும். எவரையும் அனிச்சையாய்த் திரும்பிப்பார்க்க வைக்கும் அழகு. புதுமுக மாணவியாக மொறட்டுவப் பொறியியற் பீடம் நுழையும் நாள் இன்று.

'ஆறுதலாச் சாப்பிடடி.. இன்னும் நேரம் இருக்கு...' என்று இட்லியை மெதுவாக ஊட்டிவிட்டாள் அம்மா. 'இன்னும் அரை மணி நேரத்தில கம்பஸ்ல நிக்க வேணுமம்மா... இப்பிடி ஆறுதலாகச் சாப்பிட்டா இனோகிறேஸன் செறிமணிக்கு போனமாதிரித்தான்.. காணும் விடம்மா...' என்றாள் பதிலுக்கு. '

வீட்டில கதைக்கிறது போல அங்கேயும் கதைக்காத சீனியேஸ் எல்லாம் இருப்பாங்க, கவனமாப் பாத்துக் கதைக்கவேண்டும் சரியா...'.

'ம்ம்ம்.... நானாப் போய் கதைக்கமாட்டனம்மா... அப்பிடிக் கதைத்தாலும் மரியாதையாத்தான் கதைப்பன்...' என்று தண்ணீரைக் குடித்து விட்டு கம்பஸ்ஸிற்குப் புறப்பட்டவளை வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தாள் அம்மா.
'மத்தியானம் வடிவாச் சாப்பிடு, மில்க் பக்கற் ஒன்றும் வாங்கிக்குடி... என்ன...' என்று டாட்டா காட்டினாள்.


கட்டுப்பெத்த சந்தியில் அவளுக்காகக் காத்திருப்பது போல் நின்றுகொண்டிருந்தது 255 ம் இலக்கப் பேருந்து. 'கம்பஸ் லங்க எக்காய்' என 8 ரூபாவை எடுத்து கண்டைக்ரரிடம் நீட்டினாள் மஞ்சரி. பலவித வண்ணக் கற்பனையுடன் பேருந்தின் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து புதுக் காற்றைச் சுவாசிக்கத்; தொடங்கினாள். அந்தப் புதுக்காற்று அவளுக்குள் புது உற்சாகத்தையே ஊற்றெடுக்கச் செய்தது. இது அவள் வாழ்க்கையின் இன்னொரு அத்தியாயத்தின் தொடக்கம். வாழ்க்கையின் புதுப்பது அனுபவங்களையும் புதிய நண்பர் வட்டங்களையும் உருவாக்கித்தரப் போகின்ற இனிய பயணத்தின் முதற்படி. அந்த முதற்படியில் மகிழ்ச்சியுடன் காலெடுத்து வைக்க புதுக் கற்பனைகளுடன் தயாராக இருந்தாள். மேலும் மேலும் முன்னேறிச் செல்ல ஆர்வத்தைத் தூண்டும் ஆனந்தக் கற்பனை அது. அவளையும் அறியாமல் ஒரு சிறு புன்னகை அவள் உதட்டோரம் குடிகொண்டிருந்தது. பஸ்ஸில் இருந்து இறங்கியவளை 'புதுமுக மாணவர்களை வரவேற்கின்றோம் - சீனியேஸ்' என்று மூன்று மொழிகளிலும் எழுதப்பட்டிருந்த வரவேற்புப் பதாகை வரவேற்றது. வாசலிலே பல ஆண்களும் பெண்களும் நின்று வரவேற்றது என்னமோ தனக்காகவே எல்லாமாகத் தோன்றியது மஞ்சரிக்கு. மிகுந்த பெருமையுடன் முதற்சுவட்டை பொறியியற் பீடத்தினுள் பதித்தாள். அடுத்த சில கணங்கள் மிகவேகமாக நகர்ந்தன. யார் யாரோ வந்து ஏதேதோவெல்லாம் கேட்டார்கள். ஏதேதோவெல்லாம் கூறினார்கள். கடைசியில் ஒரு நிரையில் நிற்க வைத்தார்கள்.

'பெயர் என்ன...'

'.......'

'உன்னத்தான்டி... கேட்டது விளங்கலையாடி...?'

'மஞ்சரி'.

'ஓ... அப்பனில்லையோடி....!'

'.....'

';என்ன மேடம்... கேள்வி கேட்டா பதில் சொல்லமாட்டிங்களோ...?'

'மஞ்சரி சண்முகநாதன்...'.

'யாரு சீனியேஸைச் சந்தித்தாய, யாரைத் தெரியும்?

'......' மீண்டும் அதே மௌனமே அவளிடம் இருந்து பதிலாக வந்தது.

'ஓ.. ஒருத்தரையும் சந்திக்கவும் இல்ல... ஒரு சீனியேஸையும் தெரியாதுவேற... சீனியேஸ்சோட எப்பிடிக் கதைக்கவேணும் எண்டு கூடத் தெரியாது... ஆனா பெரிய நிமித்தலாக் கிளம்பி வந்துடுவீங்க... இங்க நாங்க எல்லாத்தையும் உங்களுக்கு செய்துதரவேணும்... குப்பிவேற எடுக்கணும் என்ன....!'

அப்போதுதான் அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள். 5.8 அடிக்கும் குறையாத உயரம். வெண்மை என்று சொல்லும் அளவிற்கு இல்லாவிடினும் சருமம் பார்ப்பதற்குப் போதுமான நிறம். அரை குறையாக மழிக்கப்பட்ட தாடி மீசை அவனை ஒரு வேண்டாதவனாகவே உணர்த்தியது அவளுக்கு. இவன் யார்? எதற்காக இவ்வாறு பேசுகின்றான்? இவனுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? என பல கேள்விக் கணைகள் அவளை துளைத்தெடுத்தன. ஒருவேளை சீனியேஸாக இருக்குமோ? எதற்கும் அவனிடமே கேட்டுவிட்டல் என்ன?... அவன் இவ்வளவு கேள்விகள் கேட்கும் போது நான் ஒரு கேள்வி கேட்டால் என்ன தப்பாவாகவா போகப்போகின்றது?

'நீங்கள் யார்?..... சீனியரா?...!'

'?????!!!!!!!!!!!!!!!.........'

'ஏய் யார் கூடக் கதைத்துக் கொண்டு இருக்கிறோம் என்று சொன்னாத்தான் கதைப்பியோடி...?' அவன் தாறுமாறாக பேசத்தொடங்கினான். அவளால் அதற்கு மேல் ஓரு வார்த்தை கூடக் கேட்கக்கூடிய சொற்களாக அவை இருக்கவில்லை. காதுகளை இறுக மூடிக்கொண்டாள். மிகவும் தர்மசங்கடமான நிலைக்கு அவள் தள்ளப்பட்டாள். அவளுக்கு இது புதிது. அடுத்து என்ன செய்வது என்று புரியவில்லை. கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தோடியது. விறுவிறுவென்று அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள். இனோகிறேஸன் செறிமணி சிறப்பாக நடந்துகொண்டிருந்தது. ஆனால் அவளால் முழு ஈடுபாட்டுடன் அதில் கவனத்தைச் செலுத்த முடியாமல் இருந்தது. ஒருவித பயம் கலந்த கோபம் அவளை ஆட்கொண்டிருந்தது. நேரம் கடந்துகொண்டேயிருந்தது. இடைவேளையும் வந்தது. நீண்ட சிந்தனையின் பின் ஒரு தெளிவு அவளுக்குள் பிறந்தது. எதையும் எதிர்கொள்ளும் துணிவினைத் தந்தது அந்தத் தெளிவு. இடைவேளைக்கு அனைவரும் சிற்றூண்டிச் சாலைக்கு சீனியேஸால் அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கே அவள் கண்கள் அவனையே தேடின...


'மன்னிச்சிடுங்கண்ணா..' தானாக வலியச் சென்று கதையைத் தொடக்கினாள் மஞ்சரி. 'எனக்கு இங்க யாரையும் தெரியாதண்ணா.. சீனியேஸோட எப்பிடிக் கதைக்கவேணுமெண்று இப்ப தெரிஞ்சிற்றண்ணா.. இனிமே நான் அப்படியெல்லாம் கதைக்கமாட்டனண்ணா.. என்ன மன்னிச்சிடுங்கண்ணா....' இந்தக் குளிர் வார்த்தைகளால் அவன் அடியோடு மாறிப்போனான்.
அவள் எதிர்பார்த்ததும் அதைத்தான். அவள் எதிர்பார்த்த அடுத்த சில வார்த்தைகளை அவன் முன்மொழிந்தான்.

'சரிசரி இப்ப புரிஞ்சுது தானே.. சீனியேஸ் எண்டா எவ்வளவு முக்கியமெண்டு.. இனிமே எந்த சீனியர் கதைத்தாலும் ஒழுங்காப் பதில் சொல்லோணும் புரியுதா?..'

'... சரியண்ணா...' .

'அது சரி என்ன பெயர் சொன்னனி?'.

'மஞ்சரி சண்முகநாதன்...'.

'என்ன ரிசள்ட் எடுத்தனி?'

' 3ம் அதிவிசேட சித்தியண்ணா..'.

'..ம்.. என்ன ஃபீல்ட் விருப்பம்..?'

'கொம்பியூட்டரண்ணா..'.

'ம்.. அப்ப நல்லாப் படிக்கணும் என்ன..'.

'சரியண்ணா..'

'ம்.. உண்ட பிறந்த திகதி என்ன?',

'......'

'.. உன்னத்தான் கேட்டேன்..?'

'..எனக்கு ஒரு புதிர் தெரியுமண்ணா.. அதத்தான் யோசிக்கிறன்..' என்றாள்.

'என்ன புதிரா.. எனக்குத் தெரியாததா!... எங்க சொல்லு பார்க்கலாம்...!'.

'உங்கட பிறந்த மாதத்தை 31 ஆலும் பிறந்த திகதியை 12 ஆலும் பெருக்கி, அவற்றின் கூட்டுத்தொகையைச் சொன்னீங்களண்டா நான் உங்கட பிறந்த மாதத்தையும், திகதியையும் சொல்லுவன் ..' என்றாள்.

'அதெப்பிடி ...!' என்றான்.

'சொல்லுங்களேன்..'

'ம் 275 வருகுது...'

அவள் சில மனக்கணக்குகளைச் செய்தாள். இறுதியில் ' உங்கட பிறந்த திகதி 5ம் மாதம் 10ம் திகதிதானே..' என்றாள். அவன் ஆச்சரியத்தில் தலையை மட்டும் ஆட்டினான். 'அதெப்பிடி நானும் கண்டுபிடிப்பன் ... உன்ர பிறந்த மாதத்தை 31 ஆலும் பிறந்த திகதியை 12 ஆலும் பெருக்கி அவற்றின் கூட்டுத்தொகையைச் சொல்லு... நானும் உன்ர பிறந்த மாதத்தையும், திகதியையும் கண்டு பிடித்துச்சொல்லுறேன்.' என்றான் வெட்டி வீம்புக்கு.
'386 ..' என்றாள்.

அவன் சிறிது நேரம் ஏதேதோ கணக்குப் பார்த்தான். அவனால் முடியவில்லை. வீணாக இவளிடம் வாயைக்குடுத்து விட்டோமோ என மனதுக்குள் எண்ணிக்கொண்டது மஞ்சரிக்குப் புரிந்தது போலும், அவளின் உதட்டில் பூத்திருந்த ஒருவித கர்வப் புன்னகை அதை உணர்த்தியது. அந்தத் தருணம் அவளுக்குப் போதுமானதாக இருந்தது அவள் நினைத்ததைச் சாதிக்க.

'என்னண்ணா...? கண்டுபிடித்து விட்டீங்களா..?'

'.....'.

அவளது மௌன மறுமொழிகள் இப்போது அவன் வசமானது. தன்நிலையை உணர்ந்து கொள்வதற்கு அவனுக்குச் சிறிது அவகாசம் தேவையாக இருந்தது.

'முடிந்தால் நாளை விடையைக் கண்டுபிடித்துச் சொல்லுங்களேன்...' .

அந்த 'முடிந்தால்' என்ற சொல் தன்னைச் சூழ்நிலைக் கைதியாக்கி விட்டதை உணர்ந்தானோ என்னமோ அவ்விடத்தை விட்டு வேகமாக வெளியேறினான் அவன். சூழ்நிலைகளையும் சந்தர்ப்பங்களையும் தமக்கேற்ற விதமாகச் சாதகமாக்கி மற்றவர்களின் வாதங்களையும் வார்த்தைப் பிரயோகங்களையும் வைத்தே அவர்களைத் தமது ஆளுமைக்குள் கொண்டு வரக்கூடிய திறமை கைவரப்பெற்றவர்கள் ஒரு சிலர்தான் இருப்பார்கள். வாயுள்ள பிள்ளை பிளைக்கும், என்ற பழமொழியின் தார்ப்பரியமும் இதுதானே. தம்முடைய திறமைகளை மற்றவர்கள் மீது பயன்படுத்தி தங்களை வளப்படுத்திப் பார்ப்பதில் இவர்களுக்கு அலாதிப் பிரியம் உண்டு. அந்த ரகத்தைச் சேர்ந்தவள்தான் மஞ்சரி. அவனைச் சந்தித்த முதற் கணத்திலேயே, அவனுடைய வார்த்தைப் பிரயோகத்திலிருந்தும், தன்னை முன்னிலைப்படுத்திப் பார்க்க ஆசைப்படும் இயல்பிலிருந்தும் அவனுடைய இயலாமையைப் புரிந்து கொண்டாள் மஞ்சரி. தனது அறிவுத் திறமையைப் பிரயோகிக்கவேண்டிய தருணத்தில் மிகச் சரியாகப் பிரயோகித்து, அவனைத் தனது ஆளுமைக்குள் கொண்டுவந்துவிட்டாள். இதற்குப் பின்னர் நடைபெறப்போகும் நிகழ்வுகள் என்னவென்று அவளுக்கு ஊகிக்கக் கூடியதாக இருந்தது. எதற்கும் நாளை வரை காத்திருப்போம் என மனதுக்குள் எண்ணிக்கொண்டு மீண்டும் சிவில் ஒடிட்டோரியத்துக்குள் கால்வைத்தாள்.

மறுநாட் காலையும் அதே பரபரப்புடன் விடிந்தது அவளுக்கு. முதல்நாள் போலவே சிவில் ஒடிற்ரோரியத்திற்கு வந்து சேர்ந்தாள். அவள் கண்கள் மீண்டும் அவனைத் தேடின. ஆனால் இந்தத் தேடலில் சிறிது வித்தியாசம் இருந்தது. தன்னுடைய வெற்றியை உறுதிப்படுத்துவதற்கான தேடலே அது. அங்கோ அவன் இன்னோர் மூலையில் வேறு ஒருவருடன் கதைத்துக் கொண்டிருந்தான். மஞ்சரியைக் கண்டதும், காணதது போலத் தலையைத் தாழ்த்தி வேறு எங்கோ பார்த்தான். தன்னுடைய வெற்றியை மேலும் உறுதிப்படுத்துவதற்காக அவனுடன் போய்ப் பேச்சுக் கொடுக்கலாமோ என எண்ணி அவனை நோக்கி சில அடிகள் எடுத்து வைத்ததுதான் தாமதம் அவன் விறுவிறுவென்று, சிவில் ஒடிற்ரோரியத்தை விட்டு அகன்றான். மஞ்சரிக்கோ திகைப்பு மேலிட்டது, ஆனாலும் உள்ளூர சந்தோசம் குடிகொண்டது. மனதின் எங்கோ ஓர் மூலையில் அவன்மேல் சிறு பச்சாதாபமும் கூடவே உருவாகியது. கடைசியில் அந்தப் பச்சாதாபம்தான் மேலோங்கத் தொடங்கியது. இனோகிரேசன் செறிமணியின் இரண்டாம் நாளும் அவளுக்கு சந்தோசத்தைக் கொடுக்கவில்லை. அவனைக் கூடுதலாகப் பழிவாங்கிவிட்டோமோ என எண்ணினாள். ஆனாலும் தன்னுடைய முதல் நாள்ச் சந்தோசத்தைக் கெடுத்த அவனைச் சும்மா விடவும் மனது இடம் கொடுக்கவில்லை. வேண்டாம் இத்தோடு முடித்துவிடுவோம் என கடைசியில் முடிவுக்கு வந்தவளாய் சிறு பேப்பரும் பேனாவும் எடுத்து ஏதேதோ எழுதினாள். மதிய இடைவேளையில் அவனைச் சந்திக்க காத்திருந்தாள்.

எங்கெங்கோ தேடிக் கடைசியில் அவனைக் கண்டுபிடித்து தான் எழுதிவைத்திருந்ததை எடுத்து நீட்டினாள் மஞ்சரி. முதலில் வாங்கத் தயங்கினாலும் கடைசியில் அந்தத் துண்டுச் சீட்டை வாங்கிக் கொண்டான்.
'எனது புதிருக்கான விடை ...' என மட்டும் கூறிவிட்டு மீண்டும் சிவில் ஒடிற்ரோரியத்திற்குள் நுழைந்தாள் மஞ்சரி.

அந்தச் சீட்டில்...


12 x + 31 y = 386

x + 31/12 y = 32 and 2 மிகுதி. ------(001)

ஆகவே 2*7 / 12 = 1 and 2 மிகுதி. ----- (002)

இந்த மிகுதிதான் ( அதாவது 2 ) எனது பிறந்த மாதம். (February)

மாதம் கண்டுபிடித்தால் இலகுவாக பிறந்த நாளைக் கண்டு பிடிக்கலாம் தானே.

(386 - 31*2)/12 = 27;

எனவே எனது பிறந்த நாள் மாசி 27.


TFT ( – Tit For Tat ) …

என எழுதப்பட்டிருப்பதனைப் பார்த்து அவன் தான் மாட்டிக்கொண்டது இலேசுப்பட்டவளிடம் இல்லை என்பதை உணர்ந்து நிமிர்ந்து அவளைப் பார்த்தான். எதுவிதமான சலனமும் இன்றி மஞ்சரி சிவில் ஒடிற்ரோரியத்திற்குள் நுழைந்துகொண்டிருந்தாள்..




[ மொரட்டுவைப் பல்கலைக்கழக பொறியியற் பீடத்தில் வருடாந்தம் மலரும் சங்கமம் சஞ்சிகையின் 2008ம் வருட பிரதியில் பிரசுரிக்கப்பட்ட ஆக்கம் ]


Wednesday, June 24, 2009

மணி ரியூசன் சென்ரரில் நான்


நேற்று பசங்க படம் பார்த்தேன்.. நல்ல ஒரு அழகான படம். பாடசாலை மாணவர்களிடம் காணப்படும் நட்புரீதியான போட்டியை மையப்படுத்தி செதுக்கப்பட்டிருந்தது பசங்க படம். பள்ளிப் பசங்களின் கதையினூடு இன்னும்மொரு மெல்லியதாக ஒரு காதல் நுாலையும் கோர்த்திருந்தார் இயக்குனர். சரி விடையத்திற்கு வருவோம், இங்கே அந்தப் படத்திற்கு விமர்சனம் எழுதுவதோ அல்லது விளம்பரம் செய்வதோ என் நோக்கம் அல்ல. படத்தினை நீங்கள் பார்த்து அதனை நீங்கள் இரசிக்க வேண்டும். எனது விமர்சனங்கள் உங்களின் அந்த இரசிப்பில் கலங்கத்தை ஏற்படுத்தக் கூடாது. படத்தினை ஒருமுறை நீங்களே பாருங்களேன். படத்தினைப் பார்க்கப் பார்க்க என் மாணவப்பருவ நாட்களினை என் ஞாபகத்திற்குக் கொண்டுவந்திருந்தது அந்தப் படம்.

மிகவும் மகிழ்ச்சியாக நாங்கள் ஓடித்திருந்த அந்தப் பருவம். வெறும் பத்து பதினொரு வருடங்கள்தான் ஓடிக்கழிந்துள்ளன. ஆனாலும் நீண்ட பயணம் போன்ற ஒரு உணர்வு. அந்த மணி ரியூசன் சென்ரரில் நண்பர்கள் செய்த குறும்புகள், பரீட்சைகளில் கூடிய மதிப்பெண் பெறவேண்டும் என்பதற்காய் போட்ட போட்டிகள், வேலாயுதம் சேரிடம் வாங்கிய பாராட்டுக்கள் என எல்லாமே இன்னும் பசுமையாக இருக்கின்றன என் ஞாபகத்தில். பாடசாலை விட்டதும் கிழமை நாட்களில் செவ்வாய் மற்றும் வியாழனில் முன்று மணிக்குத் தொடங்கும் வகுப்புக்கள் மாலை ஐந்து மணிக்கு முடிவடையும். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அனேகமாக மதியம் ஒரு மணியிலிருந்து மாலை வரை நடைபெறும். கணிதம், விஞ்ஞானம், தமிழ் மொழியும் இலக்கியமும், சமூகக் கல்வியும் வரலாறும், கணக்கியலும் வணிகக் கல்வியும் மற்றும் ஆங்கிலம் ஆகிய முக்கியமான பாடங்களே நாங்கள் அங்கே கற்றோம்.

நான் அங்கே போய்ச் சேர்ந்தது 2000ம் ஆண்டின் நடுப்பகுதியல் என்று நினைக்கின்றேன். அப்போது அங்கே எனக்கு என் பள்ளி நண்பர்களை விட வேறுயாரையும் தெரியாது. அங்கு சேர்ந்த பின்னர் புதிய பல நண்பர்கள் எனக்கு அறிமுகமானார்கள். மூன்றுமணிக்கு வகுப்பு என்றால் நான் வீட்டில் இருந்து புறப்படுவதே 2:55 இற்குத்தான். அடுத்த பத்து நிமிடத்தில் மணி வாசலில் நிற்பேன். அங்கே வகுப்புக்கள் அனேகமாக ஆரம்பித்து இருக்கும். கரும்பலகையில் வேலாயுதம் சேர் சோக்கட்டியுடன் நின்றுகொண்டு இருப்பார். நான் வருகின்ற அவசரத்தில், வேகத்தில் தடார் என எனது சைக்கிளினை நிறுத்துகின்ற அந்தச் சத்தத்தில் அனைவரும் எனனை ஒருகணம் திரும்பிப் பார்ப்பார்கள். ( ஒரு நாளுக்கேனும் வகுப்புத் தொடங்க முன்னர் வராத இவன் எல்லாம் எங்கே உருப்படப்போறான் என்று நினைத்துப் பார்த்திருப்பார்களோ யார் கண்டது.. ).

வாங்கோ லெக்சரர் என்று செல்லமாக அழைப்பார் வேலாயுதம் சேர். வேறு ஒன்றும் இல்லை எனது அப்பா பௌதீகவியல் லெக்சரர் என்பதனால் அவரது நண்பரான வேலாயுதம் சேர் என்னை லெக்சரர் என்றுதான் செல்லமாக அழைப்பார். (லெக்சரர்மார்தான் பிந்தி வருபர்கள் என்பதனால் எனக்கு உறுத்துவதற்காகவே பயன்படுத்தியிருந்தாரோ தெரியாது. அவரை மீண்டும் சந்திக்கும் போது நிட்சயமாக இதைத் தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும்.). அங்கே எனக்காக முதலாவது வாங்கு காத்துகிடக்கும். வாங்கில் போயிருந்து மெல்லப் பாடத்திற்குள் நுழையும் போது திரும்ப இன்னும் ஒரு சைக்கிளச் சத்தம் அங்கேயிருப்பர்களைக் குழப்பும். எஸ்கியூஸ்மி சேர் எனக் கேட்டுக்கொண்டு ஒரு பெண் உள் நுழைவாள். நான்தான் எப்போதும் பிந்திவருவேன் என்று பார்த்தால் எனக்குப் பின்னாலும் வருவதற்து ஆள் இருக்கிறாள் என ஊள்ளூர சின்ன மகிழ்ச்சி பொங்கும் அப்போது. அவளைப் பார்த்து நன்றிக்காக சின்னப் புன்னகையொன்று புரிவேன் பதிலாக சின்ன முறைப்புத்தான் வரும்...

வேலாயுதம் சேரிடம் கணிதம் கற்பதற்கே கொடுத்து வைத்திருக்க வேண்டும். அவ்வளவு அழகாகவும் நேர்த்தியாகக் கற்பிப்பார். "அப்பு.. ராசா.. வாடா.." என அவர் செல்லமாக அழைப்பதைக் கேட்பதே பேரானந்தம். சின்னச் சின்னக் கணக்குத் தருவார் அதனை முதலாவதாக செய்து காட்டுபவர்களுக்கு தன் கையிலுள்ள மோதிரம் பரிசாகத்தருவேன் என்பார். கடைசி வாங்கில் உள்ள நண்பர்கள் அண்டப் புழுகு விடுகிறார் சேர் எனக் குரல் எழுப்புவார்கள்.. அவர் சிரித்து விட்டு செய்யுங்கடா கணக்கை என செல்லமாக வெருட்டுவார். நாமதான் கணக்கில புலியாச்சே ( நமக்கு இது கொஞ்சம் ஓவர்தான். என்ன சுயதம்பட்டம் போலக்கிடக்குதா.. பரவாயில்லை.. இருந்தால் இருக்கட்டுமே!) வெளுத்துக்கட்டி முதலாதாகச் செய்து காட்டிவிடுவோம். அவரும் பார்த்துவிட்டு ”மணிக்காயடா” என்பார் கனிவாக.. என்ன ஒரு ஆனந்தமாக இருக்கும். சின்னச் சின்னப் பெருமைகளுக்கு மயங்காதவர் யாரோ... நானும் என்ன விதிவிலக்கா.! பின்வாங்குகளில் இருந்து சேர் மோதிரத்தைக் கொடுங்கோ என்று குரல்கள் எழும். போட இது என் கல்லாண நிட்சயதார்த்த மோதிரம் கழற்றினால் மனைவி கோவிப்பாடா என்று நைசாகக் கழன்றுவிடுவார். சிலசமயங்களில் கழற்றமுடியுதில்லைடா.. இந்தா கழற்றி எடுத்துக்கோடா என்று கையையும் நீட்டிவிட்டுச் சிரிப்பார். சிலசமயங்களில் நண்பிகள் சிலரும் எனக்குப் போட்டியாக வந்துவிடுவதும் உண்டு.

எல்லோரும் எடுங்கள் ஐந்து ரூபாய் என்று ஒரு ரியூட்டை நீட்டுவார். இருபது கேள்விகள் முத்து முத்தாய் இருக்கும் என்பார். நாளை வரும்போது இருபது கேள்விகளுக்கும் பதில் எழுதிக்கொண்டு வரவேண்டும் என்பார். அந்தக் கேள்விகள் அனைத்தும் எமது கணக்குச் செய்யும் வேகத்தை அதிகரிப்பதற்கான பயிற்சிகள்தான். பின்னால் இருந்து பகற்கொள்ளை பகற்கொள்ளை எனக் கத்துவார்கள். இல்லடா இது உங்களுக்குப் பயிற்சி தான் என சிரித்து விட்டுப்போவார். அவரின் வகுப்பில் இருக்கும் போது நேரம் போவதே தெரியாது. அந்த அளவிற்கு சுவாரசியங்கள் நிறைந்தாக இருக்கும். வேலாயுதம் சேர் அடிக்கடி சொல்லுவார், மணி ஒரு கோவிலடா.. என்று! உண்மைதான் அப்போது நாங்கள் சிரிப்போம் இப்போது உணருகின்றேன் அவரின் சொற்களில் உள்ள அர்த்தங்களை.

என்னைப்போல் அந்த மணியென்னும் கோவிலிற் படித்தவர்களுக்குப் புரியும் அதன் அருமை பெருமைகளைப்பற்றி.

இந்தப்பதிவு சற்று சுயதம்பட்டப் பதிவாக இருந்தாலும் பரவாயில்லை என்று என் மாணவப்பருவத்தின் இனிய நினைவுகளைத் தூசி தட்டி உங்களோடு பகிர்வதற்காக எழுதுகின்றேன். வாழ்க்கையில் எங்குசென்றாலும் எந்த நிலையில் இருந்தாலும் என்றும் மறக்கமுடியாது அந்தக் கோவிலையும் அதில் குடியிருந்து என்னை இந்த நிலைக்கு உயர்த்திவிட்ட தெய்வங்களையும். அவர்கள் என்றும் சந்தோமாக வாழ இறைவன் அருள்புரிய வேண்டும்.!